டில்லி
ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின் உரிமையாளராகி உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் வால்மார்ட் காலடிபதித்துள்ளது.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவுக்குப் பெயர் சுதேசி ஜாக்ரன் மன்ச் என்பதாகும்.
வால்மார்ட்டுக்கு சுதேசி ஜாக்ரன் மன்ச் கடும் எதிப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், “வால்மார்ட் நிறுவனம் இந்திய சட்டங்களை மீறி பின்பக்க வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதனால் இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள், சிறு கடைகள் போன்றவை பெருமளவில்பாதிக்கப்படும்.
மேலும் இந்த பங்குகள் பரிமாற்றத்தில் பெருமளவு சட்ட மீறல்கள் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் அபாயகரமானது. இதன் மூலம் நாட்டின் செல்வம் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பு பல நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களை வால்மார்ட் வாங்கிய பின் ஏற்பட்டுள்ள விளைவுகளை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.
வால்மார்ட் பெருமளவில் சீனப் பொருட்களையே வர்த்தகம் செய்து வருகிறது. அதனால் வால்மார்ட் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. அதே நிலை நமது நாட்டுக்கும் வருவதற்கு நாமே அனுமதிக்கக் கூடாது எனவே இதில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.