சென்னை:
வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 2 மாதமாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும் போராட்டம் நடைபெறுவதால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.
இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் குழு வக்கீல்களில் கோரிக்கையை பரிசீலிப்பது பற்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வக்கீல் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் எந்தவித முடிவும் எடுக்கப்படாததால், வக்கீல் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டபடி ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
அதையடுத்து சென்னை பார் கவுன்சில் போராட்டம் நடத்தும் வக்கீல்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. போராடத்தில் கலந்துகொண்டால் வக்கீல் பணி செய்ய தடை விதிக்கப்படும் என்றது.
வக்கீல்கள் அறிவித்துள்ளபடி இன்று ஐகோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கிடையில் வழக்கறிஞர் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற இந்திய பார் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.