சென்னை:

ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் உருக்கமாக கூறியுள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்துவிட்ட நிலையில், குழந்தையை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

சிறுவன் சுர்ஜித் தற்போது 88 அடியில் இருப்பதால், 98 அடி வரை குழி தோண்டப்பட்டு அங்கிருந்து பக்கவாட்டில் துளையிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள் என பலரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு, பகல் பாராமல் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் சம்பவ இடதுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  சிறுவன் சுர்ஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  எப்படியும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு விடுவான் என அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களின் கவலை தோய்ந்த கவனம், நடுகாட்டுப்பட்டியை நோக்கியே உள்ளது. குழந்தை அடைந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் கற்பனை செய்யவே முடியவில்லை. இப்படி ஒரு துன்ப கொடுமை 2 வயது குழந்தைக்கு ஏற்பட்டது தாங்கொணா துயரம் என தெரிவித்துள்ளார்.

ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, இதுவரை அந்தக் குழந்தையை வைத்து இருந்தது போதும், எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா.

இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.