சூரியனார் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி என்றார் ஊரில் அமைந்துள்ளது.
காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார்.
சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.
அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உள்ளது. வடக்கே கோனார்க் கோவில். தெற்கே இந்த சூரியனார் கோவில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோவிலில் உருவ வழிபாடு உள்ளது.
இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.
நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோவில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.
சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோவில் கடல்கோளால் அழிந்து விட்டபோதிலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில் இன்றும் பொலிவுடன் விளங்கி வருகிறது. சூரியனார் கோவில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும் புராணவரலாற்றுச் சிறப்பாலும் நவகிரகங்களுக்கென தனித்தமைந்த கோவிற் சிறப்பாலும் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.
நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேசம். நவகிரக ஹோமம் செய்யலாம்.