டில்லி
தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காத சுரேஷ் சந்திரா அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாஜ்பாய் அரசில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியின் தனிச் செயலாராக பணி புரிந்தவர் சுரேஷ் சந்திரா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டச் செயலராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கான மொயின் குரேஷி வழக்கில் தொடர்புள்ளவர் என கூறப்படுகிறது. இவர் தற்போது தகவல் ஆணையர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் கோரி கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை 27 ஆம் தேதி விளம்பரம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு 280 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் சுரேஷ் சந்திரா இப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த பதவிக்கான தேர்வு குறித்து நடந்த கூட்டத்தில் விண்ணப்பிக்காத யாராவது இந்த பதவிக்கு தகுதி உடையவர் என்றால் அவரையும் கருத்தில் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு நவம்பர் 24 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்த பதவிக்கு தகுதியானவர்கள் என ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டது. அதில் காணப்பட்ட 14 பேர்களில் சுரேஷ் சந்திரா மற்றும் சிறுபான்மை நல செயலர் அமீசிங் லுயிகம் ஆகிய இருவரின் பெயரையும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த இருவருமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஆகும். அதன்பிறகு தகவல் ஆணையர் பதவிக்கு பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அடங்கிய குழு சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்தது.
இதற்கு தகவல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் உரிமை மைய தலைவர்களில் ஒருவரான அஞ்சலி பரத்வாஜ், “தகவல் அறியும் ஆணைய சட்டப்ப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் விண்ணப்பிக்காத ஒருவர் தேர்வுப் பட்டியலில் சேர்க்க முடியாது. இது மத்திய அர்சின் தன்னிச்சையான முடிவாகும்.
இந்த தகவல் ஆணையர் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். இந்த பதவிக்கான தேர்வு வெளிப்படையாக நடக்க வேண்டும். ஆனால் தற்போது ஆணயர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரசு அதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. இது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும்” என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் சந்திரா, “நான் இந்தப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் என்னை தேர்ந்தெடுக்கும் முன்பு என்னிடம் வாய்மொழியாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நான் எழுத்து பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு சில அரசின் முக்கியத் துறைகளுக்காக ஏற்கனவே உயர் நிர்வாக பொறுப்பில் இருந்து ஆனால் விண்ணப்பிக்காதவர்களை தேர்வு செய்வது தவறில்லை” என தெரிவித்துள்ளார்.