மோடி குடும்பப்பெயர் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் மார்ச் 23 ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த நீதிமன்றம் அளித்த 30 நாட்கள் அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி ராகுல் காந்தி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தியின் மனுவை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

2019 லோக்சபா தேர்தலின் போது, ​​கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில், ‘எல்லா திருடர்களும் மோடியை எப்படி குடும்பப் பெயராக வைத்துள்ளனர்?’ என, ராகுல் காந்தி கூறியிருந்தார். இது தொடர்பாக பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யவுள்ளார். சூரத் நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைக்க மறுத்ததை அடுத்து மேல்முறையீட்டு மனுவில் இதிலிருந்து விடுபட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.