சூரத்

குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் ராஜ்கோட் நகரங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

 

நாடெங்கும் கொரோனா பரவல் மூன்றாம் அலை பாதிப்பு கடுமையாக இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.  எனவே நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.   முதலில் 18-44 வயதுக்குள் இருப்போருக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகளே  கொள்முதல் செய்ய உத்தரவிட்ட மத்திய அரசு பிறகு அதை மாற்றியது.

அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து இலவசமாக வழங்குவதாக அறிவித்தது  அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்து வருகிறது.  பல இடங்களில் தடுப்பூசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

அவ்வகையில் தட்டுப்பாடு காரணமாகக் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள 230 தடுப்பூசி மையங்களில் 130 மையங்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.   மீதமுள்ள 100 மையங்களும் குறைந்த அளவு மருந்துகளுடன் இயங்கி வருகின்றன.   இந்த வாரத் தொடக்கத்தில் சூரத் நகரில் மூன்று நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதே நிலை ராஜ்கோட் நகரிலும் உள்ளது.  இங்கும் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஒரு சில மையங்கள் தவிர மற்றவை மூடப்பட்டுள்ளன.   நேற்று குஜராத் மாநிலத்துக்குத் தடுப்பூசி விநியோகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் விநியோகம் நடக்காததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.