டெல்லி: 2 வாரங்களுக்குள் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் இல்லையேல் மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
”நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட தீர்பாய நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான வழக்கின் கடந்த விசாரணையின்போது, மத்தியஅரசு உச்சநீதிமன்ற உத்தரவுளை மதிப்பதில்லை என தலைமைநீதிபதி என்.வி.ரமணா கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது மீண்டும் மத்தியஅரசை சாடிய தலைமைநீதிபதி ரமணா, “தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேர்வுக்குழு பலரின் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கிறது. அதில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மற்றவர்களைக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது. என் தலைமையிலான தேர்வுக்குழு 10 தொழில்நுட்ப உறுப்பினர்கள், 9 நீதிபதிகளைத் தேர்வுசெய்து பரிந்துரைத்தது. அதில் 3 பேரை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்துள்ளது . சட்டத்துறையில் தேர்வுக்குழுப் பட்டியலை புறக்கணிக்கவும், காத்திருப்பில் வைக்கவும் முடியாது. எந்த அடிப்படையில் மத்திய அரசு நியமிக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மற்றொரு நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் தலைமைப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. ஒரு வங்கி கடன் செலுத்தாத வாடிக்கையாளரின் வீட்டையோ அல்லது தொழிற்சாலையையோ ஜப்தி செய்ய முயன்றால், தீர்ப்பாயத்தில் உத்தரவு பிறப்பிக்க யாருமில்லை. உயர் நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை விசாரிக்க மறுக்கிறது. நீதி கிடைக்க வழியில்லை” என்றார் காட்டமாக.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மனுதாரர்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரிய வகையில் வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வழக்குகள் மாதக்கணக்கில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
“உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான தேர்வுக் குழு தீர்ப்பாயங்களுக்குத் தலைமைப் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டும் அதை நிரப்பாமல் மத்திய அரசு இருக்கிறது. இதனால் எங்களுக்கு நேரம் வீணாகியுள்ளது. ‘
எனவே, காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு அடுத்த 2 வாரத்தற்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்போம். மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு பாயும் என்று கடுமை காட்டியதுடன், அடுத்த விசாரணைக்கு வரும்போது நியமன ஆணைகளோடு வாருங்கள். இல்லையெனில் நியமிக்கப்படாததற்கான காரணத்தோடு வாருங்கள்” என்று கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.