சென்னை: அதிமுக விவகாரத்தில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிமுக அவைத்தலைவர் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக, எடப்பாடி தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், எடப்பாடி தரப்பின் இடையீட்டு மனுவை, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் விசாரித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என கூறிய நீதிபதிகள், இதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். வேட்பாளர் தேர்வை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும்.இறுதியில் தேர்வாகும் வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, வேட்புமனுவுக்கு தாக்கல் முடிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பொதுக்குழுவை கூட்டாமலேயே வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, எடப்பாடி ஆதரவாளர்களின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு செய்ய கூறியது சாதகமாக இருந்தாலும் கூட பிப்ரவரி 7 ம் தேதிக்குள் இதனை செய்வது என்பது சவாலானதாக இருக்கும் என்பதால் அதுபற்றிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் ஓ பன்னீர் செல்வம் உள்பட கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்களையும் பொதுக்குழுவில் இணைத்து கருத்து கேட்க உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு மட்டும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பொதுக்குழு கூட்டப்படாமல் ஆதரவு கடிதம் பெறப்பட்டால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்குமா? இல்லையா? இதில் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து என்ன? செய்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பபடுகிறது.
அதாவது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்த கடிதங்களை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தொடர்பான அம்சங்களை எழுத்துப்பூர்வமாக திங்கட்கிழமை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கான பணியை நேற்று இரவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு துவக்கி உள்ள நிலையில் இன்றும், நாளையும் முழுவீச்சில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இந்த முயற்சியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான்.