டெல்லி: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நிலம் கையப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் மத்திய மாநிலஅரசுகளால் அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த 5 மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சிகளும், இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, சாலை அமைக்க தேவையான நிலங்களை கையப்படுத்த தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள், பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு நடத்தியது. தொடர்ந்து, விசாரணையை அடுத்து, தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும் என்று கூறியதுடன், 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்மனுதாரர் வழக்கறிஞர்,. சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் இருப்பதாகவும், இதை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதாகவும், இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங் களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய அரசு மற்றும் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தீர்ப்பை வழங்கி உள்ளது.