ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த், அதற்கு முன்னதாக தான் நடிக்கும் “அண்ணாத்த” படத்தை முடித்து கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

ரஜினிகாந்தின் 168- வது படமான இதனை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 43 நாட்கள் ஷுட்டிங் பாக்கியுள்ளது.

ஒரே மூச்சில் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

14 ஆம் தேதி ஆரம்பமாகும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் ‘தனி’ விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார். கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து ரஜினிக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை படக்குழு செய்துள்ளது.

அவரது உடல்நிலையை பார்த்துக்கொள்ள தனி டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் தங்குவதற்கு பிலிம் சிட்டியில் உள்ள ஓட்டலில் சொகுசு அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒன்றரை, மாதத்தில் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட வேலைகள் இருப்பதால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகே ‘அண்ணாத்த’ ரிலீஸ் ஆகும்.

“நல்லவேளையாக இந்த படத்தில் பெரும் கூட்டம் இடம்பெறும் காட்சிகளை கொரோனா பரவல் உருவாகும் முன்பே படமாக்கி விட்டோம்” என்கிறார், சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அலுவலர் செம்பியன் சிவகுமார்.

– பா. பாரதி