டெல்லி: தடுப்பூசிகளுக்கு விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? ஏன் வெவ்வேறு விலை அறிவிக்கப்பபட்டு உள்ளது என்றும், அடுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை எவ்வளவு என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்தியஅரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரடவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை உக்கிரமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை கைமிறி சென்றுவிட்டதாக சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் அதிகரித்து வரும் நோயாளிக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் கிடைப்பதிலும் பற்றாக்குறை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று, ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்குப்பதிவு செய்தது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
அப்போது, ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே விரும்புகிறோம். இருந்தாலும், இந்த விஷயத்தில் நாங்கள் மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. ஆக்சிஜன் என்பது நாடு சார்ந்த தேசிய அளவிலான பிரச்சினை. எனவே அதை விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என நீதிபதிகள் கூறினர்.
விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா , ஆக்சிஜன் பிரச்சனை என்பது நாடு சார்ந்த பிரச்சனை, இதில் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுகின்றனஎன தெரிவித்தார்.
இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கொரனோ இரண்டாம் நிலையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை பற்றி அறிக்கை தர வேண்டும் என்றனர்.
தொடர்ந்து, ராணுவத்தின் வசம் உள்ள மருத்துவ வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
கொரோனா தடுப்பு மருந்துகளின் வெவ்வேறு விலைகள் குறித்தும் விளக்கம் கேட்டனர். விலை நிர்ணயம் எதனடிப்படையில் செய்யப்படுகிறது என்று வினவிய நீதிபதிகள், மருந்து கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 6படி விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை, தேசிய பேரிடர் காலத்தில் செயல்படுத்தாமல் எப்போது செயல்படுத்தப் போகிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியதுடன்,
அடுத்த சில வாரங்களுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு,
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதி,
18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ரெம்டெசிவிர், ஃபெவிபிரவிர், மருத்துகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
போதிய மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையும் உறுதி செய்ய வேண்டும்
என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி, அதற்கு வரும் 30ந்தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.