டெல்லி: ஜெயலலிதா மரண வழக்கில் அப்போலோவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என எச்சரித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி   ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை எதிர்த்து, அப்போலோ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், இடைக்கால தடை விதித்தது. இதனால்,  இரண்டு ஆண்ட காலமாக ஆறுமுகசாமி ஆணையம் செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைக்கூட வழக்கை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,    விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வலியுறுத்தினார்.

அதற்கு எடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஆணையத்தின் விசாரணை ஒரு மாதத்தில் நிறைவடைந்து, அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளது. எனவே, தடையை நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் முடக்கி வருவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம்சாட்டபபட்டது. மேலும் இந்த இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த மனுக்களை விசாரிக்க சிறிது நேரமே போதுமானது. ஆனாலும் ஏன் இந்த மனுக்கள் விசாரிக்கப்படாமல் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணையில் வாதங்களை முன்வைக்க முன் தயாரிப்புடன் வர வேண்டும் என்றும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என்று அப்போலோ தரப்புக்கு திட்டவட்டமாக தெரிவித்தனர்.