டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, சிதம்பரம்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் 5ந்தேதி வரை வைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தை திகார் ஜெயிலில் அடைக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கிடையில், சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறையும் முயற்சி மேற் கொண்ட நிலையில், சிதம்பரம் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வந்தன.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கில், யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று  முன்ஜாமின் வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, சிதம்பரம் முன்ஜாமின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, போபன்னா அமர்வு தனது தீர்ப்பில், முன்ஜாமின் வழங்குவதற்கு ஏற்ற பொருத்தமான வழக்கு அல்ல என்று  தெரிவித்து உள்ளது. மேலும், பொருளாதார குற்றங்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. இதைவெவ்வேறு அணுகுமுறையுடன் கையாளப்பட வேண்டும் என்றும்  தெரிவித்து உள்ளது.