டில்லி:
சபரிமலை தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரியில் விசா ரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் இருப்பதால், வழக்கை இந்த மாதம் விசாரிக்க சாத்திய மில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அய்யப்பன் கோயிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் 29ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அப்போது, பெண்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.. அவர்களுக்கு ஆண்களுக்கு சமமான உரிமை உண்டு என்றும் கூறியது.
ஆனால், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நாடு முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.
அதைத்தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து ஏராளமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம், மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ந்தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதற்கிடையில், மேல்முறையீடு மனுக்கள் மீது உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, குறிப்பிட்டுள்ள நாளில் விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்..
இந்த நிலையில் வாக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. வழங்கு சம்பந்தமாக விசாரணை செய்யும் நீதிபதி அமர்வில் உள்ள இந்துமல்கோத்ரா விடுமுறையில் இருப்பதால் வழக்கை இந்த மாதம் விசாரிக்க வாய்ப்பில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார்.