புதுடெல்லி: நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கவும், சில முக்கிய நடைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு நீதி கிடைப்பதில் எக்காலத்திலும் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்க முடியாமல் முற்றிலுமாக முடங்கியது. அடுத்த சில நாட்களில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்கு விசாரணை துவங்கியது. முதற்கட்டமாக, உச்ச நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் வழக்குகளை விசாரித்தன. ஒரு நாளில் 10 முதல் 15 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
தற்போது, ஆன்லைன் அமர்வுகளின் எண்ணிக்கையை உச்ச நீதிமன்றம், பத்தாக உயர்த்தியுள்ளது. இதனால் விசாரிக்கப்படும் வழக்குகள் எண்ணிக்கையும் அதிகரித்தன.
இந்நிலையில், ஆன்லைன் வாயிலாக வழக்குகளைப் பதிவுசெய்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை நடத்துவதை ஊக்குவிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நீதிமன்றத்தில், மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் வரும் என்று கருதப்படுகிறது.
எனவே, நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கி, சில முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதேசமயம், இந்த வீடியோ கான்பரன்சிங் நடைமுறைக்கு எந்த தொழில்நுட்ப பிரச்சினைகளும் வந்துவிடக்கூடாது என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டது.