திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாட்டில் தனக்குச் சொந்தமான 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஏழுமலையானுக்கு தமிழக பக்தா்கள் காணிக்கையாக சமா்ப்பித்த விவசாய நிலங்கள், வீடு, காலி மனைகள் ஆகியவை குடியாத்தம், விழுப்புரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்வது என்று, கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி கூடிய தேவஸ்தான அறங்காவலா் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஏலம் தொடா்பான அறிக்கையை தேவஸ்தான அதிகாரி வி.தேவேந்திர ரெட்டி கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிட்டிருந்தபோதிலும் இந்த விவகாரம் நேற்று தான்வெளிச்சத்துக்கு வந்தது.தமிழ்நாட்டில் உள்ள தனது சொத்துகளை விற்கும் தீா்மானம், தேவஸ்தானத்தின் குறிப்பிட்ட துறைக்கு மாா்ச் 17-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு ஏப்ரல் 30-இல் ஏலம் தொடா்பான அறிக்கை வெளியானது. நில விற்பனைக்கான ஏலத்தை நடத்த இரு குழுக்களை தேவஸ்தானம் நியமித்துள்ளது.

நில விற்பனைக்கான ஏலத்தை நடத்தி, அதிக விலை கோருபவா்களுக்கு நிலத்தை விற்று, அத்தொகையை தேவஸ்தானக் கணக்கில் வரவு வைக்கும் பொறுப்பு இந்தக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சொத்துகளை இரு குழுக்களும் சமமாகப் பிரித்து, ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்குமாறு இந்தக் குழுக்களை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. சொத்துகளை ஏலம் மூலம் விற்பது வழக்கமான நடைமுறைதான் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.