பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள பெங்களூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அரண்மனை மைதானத்தின் ஒரு பகுதி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கர்நாடக அரசு கைப்பற்றியது.

இந்த நிலத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மைசூரு அரசு குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை எதிர்த்து கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

அதேவேளையில், பெங்களூரு அரண்மனை (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம், 1996ன் மூலம் நகர வளர்ச்சி திட்டங்களுக்காக 1996ம் ஆண்டு பெங்களூரு அரண்மனை மைதானத்தை கர்நாடக அரசு ரூ. 11 கோடி இழப்பீடு கொடுத்து மைசூரு அரசு குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியிருந்தது.

இதுதொடர்பாக ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மற்றும் பிறரின் சட்டப்பூர்வ வாரிசுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுக்கள் மற்றும் பிற வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் தனது உத்தரவை பிறப்பித்தது.

கர்நாடக முத்திரைச் சட்டத்தின் பிரிவு 45B இன் படி, அரண்மனை மைதானத்தை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வழிகாட்டுதல் மதிப்புக்கு ஏற்ப, சாலை விரிவாக்கத்திற்காக அரண்மனை நிலம் மதிப்பிடப்பட்டு, மாற்றத்தக்க TDR வழங்கப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்தது.

இதையடுத்து அரண்மனை மைதானத்தின் மொத்த பரப்பளவு 472 ஏக்கர் 16 குண்டாக்களில் சாலை விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட 15.36 ஏக்கர் நிலத்திற்கு ₹3,014 கோடி TDR இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டிசம்பரில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஒரு சிறிய நிலத்திற்கு பெரிய தொகையை செலுத்த வேண்டிய சுமையைத் தவிர்க்க அரசாங்கம் ஒரு அவசரச் சட்டத்தை நாட முடிவு செய்திருந்தது.

பெங்களூரு அரண்மனை மைதானப் பகுதியைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மாநில அரசாங்கத்திடம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ‘பெங்களூர் அரண்மனை (நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா 2025’க்கு ஏப்ரல் 14ம் தேதி ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் ₹3400 கோடி டிடிஆரை ஒரு வாரகாலத்திற்குள் டெபாசிட் செய்ய ஏப்ரல் 30ம் தேதி உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ₹3400 கோடிக்கான இழப்பீடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய கர்நாடக அரசு இதனை பெங்களூரு அரண்மனை மைதான ஒழுங்குமுறை மசோதா மீதான வழக்கில் தீர்ப்பு வரும் வரை அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று மாநில அரசு இடைக்கால மனுவில் கோரியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் பெங்களூருவில் பெல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலைகளின் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட அரண்மனை மைதானத்தில் உள்ள 15 ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு மைசூர் அரச குடும்பத்திற்கு ₹3,400 கோடி மதிப்புள்ள மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகளை (TDR) உடனடியாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.