தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் 15 பேர் தாக்கப்பட்டனர் அதில் 12 பேர் இறந்து விட்டனர் என்று உள்நோக்கத்துடன் ட்விட்டரில் தவறான தகவல் பதிவிட்டார் உத்தர பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரஷாந்த் உம்ரா.
இதுதொடர்பாக தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பிரஷாந்த் உம்ரா மனு தாக்கல் செய்த நிலையில் 15 நாட்கள் காவல் நிலையத்தில் காலை 10:30 முதல் மாலை 5:30 வரை ஆஜராகும்படி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பிரஷாந்த் உம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி சிறப்பு விடுப்பு மனுவையும், பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞராக உள்ள பிரஷாந்த் உம்ரா பொறுப்புடன் செயல்பட தவறியதாகவும், ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்துக்கள் அதற்கு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள்.
15 நாட்கள் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மாற்றி 10ம் தேதி திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்தி பேசுபவர்களை தமிழர்கள் தாக்குவதாக பிரஷாந்த் உம்ரா தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவை நீக்கியபோதும் ஒரு வழக்கறிஞராக அவரது செய்கை மிகவும் தரம்தாழ்ந்தது அதனால் அவர் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த கடும் உத்தரவை அடுத்து அடுத்த விசாரணைக்கு முன் பிரஷாந்த் உம்ரா பகிரங்க மன்னிப்பு கேட்பார் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.