டெல்லி: நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு, “மாஞ்சோலை பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. குறிப்பாக அகஸ்தியர் மலை நிலப்பரப்புடன் தொடர்புடையது. இது பெரியார் புலிகள் காப்பகத்தின் தொடர்ச்சியான பகுதியாகும். இப்பகுதியை மீண்டும் வனமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தடை செய்யப்பட்ட பகுதியாகும்” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில், அகத்திய மலை நிலப்பரப்புடன் தொடர்புடைய பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் எந்த பிற நடவடிக்கைகளையும் அரசு அனுமதிப்பது இல்லை. குறிப்பாக சிங்கப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் கூட தற்போது அரசு கையிலெடுத்து, மீண்டும் வனப்பரப்பாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு வேறு இடத்தில் மறுவாழ்வு அளிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த வனப்பரப்பையும் ஆக்கிரமிக்க அரசு அனுமதிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் வனத்தை தவிர வேறு பயிர் சாகுபடி, தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட ஏதேனும் வேறு நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உத்தரவிட்டனர்.