டெல்லி: பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகத்துக்கு எதிரான வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இது போல கடவுள் மறுப்பை அரசு ஆதரிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதை அகற்றக்கோரி, சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம். தெய்வநாயகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. கடவுள் மறுப்பு வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடவுள் மறுப்பு அடங்கிய வாசகங்கள் இடம்பெற்றுள்ள சிலைகளை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்புடுத்துவதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மனுமீது து தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும், இது போல கடவுள் மறுப்பை அரசு ஆதரிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிக்ள வழக்கை ஒத்திவைத்தனர்.