சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என கூறி  தமிழகஅரசு ஜகா வாங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில், பேரறிவாளன் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் மூலம் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்த மற்ற கைதிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறை கைதிகளாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகஅரசு சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான  ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் இதுவரை ந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், ஏற்கனவே பேரறிவாளனை நீதிமன்றமே விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.