டெல்லி: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு வெளிநாட்டு பங்குகள் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கோரிய அமலாக்கத்துறை யின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்தமை, சிங்கப்பூர் வெளிநாட்டுப் பங்குகளை கையகப்படுத்துதல் மற்றும் அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களிடையே மாற்றுதல் ஆகிய விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பியது.
அதாவது, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை ரூ.32.69 கோடிக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி வாங்கியதாக புகார் எழுந்தது. வாங்கிய பங்குகளை ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிங்கப்பூரின் சில்வர் பார்க் நிறுவன பங்குகளை வாங்கியதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக ED புகார் தெரிவித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை நோட்டீசை எதிர்த்து ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையினரின் நோட்டீஸ்க்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.