டில்லி
கடந்த 2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங் தள் உறுப்பினர் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் எங்கும் கடும் கலவரம் நிகழ்ந்தது. பல இடங்களில் இஸ்லாமியர்கள் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்டனர். பிப்ரவரி மாதம் நரோடா நகரில் நடந்த கலவரத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் பஜ்ரங் தள் உறுப்பினர் பாபு பஜ்ரங்கி என அழைக்கப்படும் பாபுபாய் படேல் மற்றும் 30 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதில் முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியும் ஒருவர் ஆவார். பாபு பஜ்ரங்கிக்கு முதலில் சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கபட்டது.
அதன் பிறகு அந்த தண்டனை 21 வருடங்களாக குஜராத் உயர்நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது. இந்த காலத்தில் நன்னடத்தை குறைப்பு மற்றும் ஜாமீன் போன்றவை எதுவும் கிடையாது என தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.
சபர்மதி செண்டிரல் சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் வருடம் முதல் அடைக்கப்பட்டுள்ள பாபு பஜ்ரங்கிக்கு கடந்த சில நாட்களாக பார்வைக் குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு முழுமையாக பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை ஒட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.