புதுடெல்லி: பலகோணங்கள் கொண்டு, நாட்டில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இதனுடன் சேர்ந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களும் புதுப்பொலிவுடன் வடிவமைப்பு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவைகளில் இருக்கும் வடிவ அம்சங்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயம், 8.54 கிராம் எடை இருப்பதோடு, அதன் வெளிப்புற விட்டம் 27 மில்லிமீட்டர் அளவில் இருக்கும். அதன் வெளிப்புற வளையம், 65% செம்பு, 15% துத்துநாகம் மற்றும் 20% நிககல் ஆகிய உலோகங்களைக் கொண்டுள்ளது.

உள்புற வளையமோ, 75% செம்பு, 20% துத்தநாகம் மற்றும் 5% நிக்கல் ஆகிய உலோகங்களைக் கொண்டுள்ளது.

இந்த நாணயத்தின் முன்பக்கம், அசோக ஸ்தூபியில் உள்ள சிங்க உருவம் பொறிக்கப்பட்டு, அதன்கீழே வாய்மையே வெல்லும் என்ற வாசகம் இந்தியில் இடம்பெற்றுள்ளது. அதன் கீழே, இந்திய ரூபாய் குறியீட்டுடன் 20 என்ற எண் இடம்பெற்றுள்ளது.

நாணயத்தின் இடப்புற சுற்றளவில் ‘பாரத்’ என்ற வார்த்தை இந்தியிலும், வலப்புற சுற்றளவில் ‘இந்தியா’ என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் தமக்குள் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளன. புதிய நாணயங்கள், விரைவில் மக்களுடைய கைகளில் புழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி