மும்பை: பள்ளிக்கூடமே போகாத ஒரு மராட்டியப் பழங்குடியினப் பெண்மணி, இன்று தனது பாரம்பரிய வேளாண் செயல்பாடுகளால், விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் கற்றுத்தரும் நிலையில் உள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஹிபாய். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், இவருடைய பேரன் நோயில் விழுந்தபோது, நாம் இன்று உண்ணும் பூச்சிமருந்து மற்றும் கொடுமையான ரசாயனங்கள் கலந்த உணவுப் பொருட்கள்தான் காரணம் என்பதைக் கண்டுகொண்டார்.

எனவே, கலப்பு இன விதைகளை பயன்படுத்துவதை நிறுத்தி, பாரம்பரிய வேளாண்மைக்கு திரும்ப வேண்டுமென உறுதி கொண்டார். அன்றிலிருந்து தொடங்கியது அவரின் திருமுயற்சி! பாரம்பரிய விதைகளைத் தேடி சேகரிக்கத் தொடங்கிய அவர், அந்த விதைகள், தாங்கள் வளர்வதற்கு வெறும் காற்றையும் நீரையும் மட்டுமே சார்ந்திருக்கின்றன என்பதைக் கண்டுகொண்டார்.

தனது சிறிய மண் வீட்டிலேயே பாரம்பரிய விதை வங்கி ஒன்றை ஏற்படுத்தினார். இதர விவசாயிகளிடையே தனது அறிவைப் பகிர்ந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

17 வகை பயிர்களிலிருந்து 43 வகையான பாரம்பரிய இனங்களைப் பெருக்கி, அவற்றைப் பாதுகாத்தார். மேலும், 32 வகை பயிர்களின் 122 பாரம்பரிய இனங்கள் தற்போது இவரின் விதை வங்கியில் பாதுகாக்கப்படுகின்றன.

தான் ஈடுபடுவது விஞ்ஞான ரீதியிலான ஒரு முயற்சி என்ற புரிதல் இன்றியே, தன்னுடைய நடைமுறை உலக அறிவு மற்றும் அனுபவ அறிவு ஆகியவற்றைக் கொண்டு இவர் சாதித்துள்ளார்.

“தான் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றது கிடையாது. எனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திய அறிவுசார் செயல்முறையையேப் பின்பற்றினேன். எனது முயற்சியை தொடக்கத்தில் அனைவரும் கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று நிலைமையே வேறு” என்கிறார் ராஹிபாய்.

அவருடைய 20 ஆண்டுகால உழைப்பின் பலனாய், இன்று பல விருதுகளும் அங்கீகாரங்களும் அவரைத் தேடி வருகின்றன. ராஹிபாய்க்காக கட்டப்பட்ட விதை வங்கி மற்றும் வீட்டை மராட்டிய மாநில அரசு திறந்து வைக்கிறது.

பல வேளாண் விஞ்ஞானிகளும், மாணவர்களும் இவரைத்தேடி கற்றுக்கொள்ள வருகிறார்கள். இவருக்கு மக்கள் அனைவரும் ‘விதைகளின் தாய்’ என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

– மதுரை மாயாண்டி