டெல்லி: உயர் படிப்புகளுக்கான தகுதி தேர்வுகளான நீட், ஜே.இ.இ போனற் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால், உயர்படிப்புக்கு உரிய தகுதி தேர்வுகளான ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும், செப்டம்பர் 1முதல் 6 ஆம் தேதி வரை ஜே.இ.இ தேர்வும் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த சமயத்தில், தேர்வுகள் நடத்துவது சரியல்ல என்றும், ஜேஇஇ, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மத்தியஅரசு சார்பில் ஆஜரான வதழக்கறிஞர், தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சமூக இடைவெளியோடு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
இதற்கு மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தேர்வு குறித்த முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது எதிர்காலத்தின் மாணவர்களின் நலனை கேள்விக்குறியாக்கும் என தெரிவித்தது.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்க அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தது.
நீட் தேர்வும், ஜே.இ.இ. தேர்வும் ஏற்கெனவே கொரோனா பொது முடக்கம் காரணமாக ஆறு மாதங்கள் தள்ளிப் போயுள்ளன. எனவே மீண்டும் தள்ளிவைக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.