சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்ற சென்னை மாநகராட்சி எடுத்து வந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்று வதற்கு தடை விதிக்க மாட்டோம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர், இளங்கோ தெரு அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார். அவரது குடியிருப்புக்கு அருகே குடிசை பகுதிகள் நிறைந்துள்ளதால், அதை அகற்றக்கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை வழக்கை விசாரித்த நீதிமன்றமும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அவர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அவற்றை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கடந்த அதிமுக அரசு நீதிமன்ற உத்தரவின்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது திடீரென, தமிழகஅரசு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பொதுப்பணி துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் அங்கிருந்த வீடுகளை அகற்றி வருகின்றனர். முதல் கட்டமாக 130 வீடுகள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு மறு குடியமர்வுக்காக பெரும்பாக்கம், எழில் நகர், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கியிருந்தனர். ஆனால் அந்த வீடுகள் எதுவும் சரியான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுடோடு இருப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அந்த பகுதி சரியாக இல்லை எனவும் கூறி இளங்கோ தெரு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தநிலையில் மீதமுள்ள வீடுகளை அகற்றச்சென்ற அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அதிகாரி களுக்கும் இளங்கோ தெரு மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் வி.ஜி கண்ணையா என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஆக்கிரமிப்பிற்கு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென தீ வைத்து கொண்டு இறந்தார். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலிததது.
இதனைத்தொடர்ந்து,வீடுகளை இடிக்கும் பணிகள் நிறுத்தி தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன.மேலும்,வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.எங்களுக்கான மாற்று இடம் அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழகஅரசு வழக்கறிஞர், அரசு சார்பில் ஆக்கிரமிப்பாளர்களக்கு மாற்று இடம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார் என்பதை கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நிறுத்த உத்தரவிடப்போவதில்லை என தெரிவித்தது. மேலும், ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டே, அந்த இடத்தை காலி செய்யவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய தேவையான நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது .எனவே, எங்களது உத்தரவு நீர்த்துப்போவதை விரும்பவில்லை. தேவையான காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினர்.
மேலும், தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மிகவும் சென்சிடிவ் ஆக உள்ளார். அதன்படி, மாற்று இடங்கள் வழங்கப்படும் என்ற உறுதியினை கொடுத்துள்ளார். முதலில் அந்த மாற்று இடங்களுக்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டு, உச்சநீதிமன்றதின் தீர்ப்புக்கு மதிப்பு அளியுங்கள்.உங்களது கண்ணாமூச்சி ஆட்டங்களை நிறுத்தி கொள்ளுங்கள்”, என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.