டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை  தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற ஒரு மனுவை அவர்  தாக்கல் செய்தற்கு  கடும் கண்டனம் தெரிவித்தது.  மேலும், உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒரு வார்த்தையைகூட மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் உள்ள கருத்துக்கள் செந்தில் பாலாஜியின் வேலைக்காக பணம் கொடுத்த வழக்கு விசாரணையை பாதிக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது, 2022 உத்தரவை மாற்ற மறுத்து, தனது கண்டனத்தையும் பதிவு செய்தது.

அரசு வேலை வாங்கி வருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதான வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதானார். இந்த வழக்கில் பல மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் ஆகியவற்றில் எதையாவது ஒன்று தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகினார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கின் பிரதான குற்றப்பத்திரிகையுடன், பல துணை குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றம் இணைத்தது. அதனை எதிர்த்து பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுப்படி செய்த நிலையில், அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி அளித்த தீர்ப்பு, புதிய விசாரணைக்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த தீர்ப்பு மற்றும் பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த உத்தரவில் இடம்பெற்ற நீதிபதிகளின் கருத்துகள் ஆகியவற்றை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறையை கடுமையாக கண்டித்தனர். மேலும், நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் வழங்கிய தீர்ப்புகளை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்வீர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

அத்துடன், ”செந்தில் பாலாஜிக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் ஒரு வார்த்தையை கூட தொட மாட்டோம். எந்த தீர்ப்பையும் மாற்றவோ அல்லது நீக்கவோ மாட்டோம்” என தெரிவித்தனர்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ” இதனால் வழக்கின் விசாரணை பாதிக்கக் கூடாது என்று அமர்வு கூற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதிபதிகள், ” நீதிமன்ற தீர்ப்பில் மனுதாரருக்கு (செந்தில் பாலாஜி) எதிராக கூறப்பட்ட பாதகமான கருத்துக்கள் விசாரணையின் போது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என தெளிவுப்படுத்தி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.