வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.
இது தொடர்பாக போலி வீடியோ-க்களை பதிவேற்றியதாக பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஏப்ரல் 5 ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் காஷ்யப்-பிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
இவர் மீது தமிழ்நாட்டில் 6 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது தவிர பீகாரில் 3 எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது இதையடுத்து இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகார் மற்றும் தமிழ்நாட்டில் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை பீகாருக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
காஷ்யப் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த தாவே, “காஷ்யப் மீது இரண்டு மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது, தவிர அவர் மீது தே.பா.ச. வழக்கும் போடப்பட்டுள்ளது”
“அவருக்கான அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதை அடுத்து தே.பா.ச. வழக்கில் இருந்து வரை விடுவிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
இதுகுறித்து நீதிபதிகள் “காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “காஷ்யப் ஒரு அரசியல்வாதி அவர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அவருக்கு சமூக வலைதளத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.”
“அவர் வேண்டுமென்றே வதந்தி வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அவரது வழக்கை பீகாருக்கு மாற்றக் கூடாது” என்று வாதிட்டார்.
தமிழக காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷ்யப் மீது தே.பா.ச. போடப்பட்டிருப்பதை நீதிமன்றத்தில் உறுதி செய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காஷ்யப் மீதான தே.பா.ச. குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், “மதுரை சிறையில் இருந்து காஷ்யப்-பை மாற்றக் கூடாது” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.