சென்னை:  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட உள்ளார். அவரை உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சில மாநிலங்களுக்கும் தலைமை நீதிபதிகள் பெயர் பரிந்துரைக்கட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலாயா உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கொலிஜியம் அறிவித்தது. அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து,  சென்னை உயர்நீதி மன்றத்துக்கு  பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹியை (Amreshwar Pratap Sahi) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  உச்சநீதிமன்ற கொலீஜியம் நியமித்தது.

ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் டிசம்பருடன் முடிவடைகிறது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டின் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மெட்ராஸ் ஐகோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், பஞ்சாப், அரியான மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,  டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி, தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மித்தல் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சுதன்ஷூ துலியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து, ஓரிரு நாளில் குடியரசுத்தலைவரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.