சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வே நாளேடான முரசொலி பத்திரிகை அமைந்துள்ள நிலம் தொடர்பான அவதூறு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2020 டிசம்பரில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பாஜக தலைவரும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருமான எல் முருகன், முரசொலி பத்திரிகை இடம் தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இதை கண்டித்து, அவர்மீது திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரி எல்.முருகன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எல்.முருகன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ந்தேதேதி மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு கடந்த ஆண்டு (2023) செப்டம்பரில் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ” ‘உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை’ என்று மனுதாரர் கூறுகிறார். இதில் உங்களுக்கு அவதூறு நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவிக்க நீங்கள் தயாரா?” என்று நீதிபதிகள் எதிர்மனுதாரர் தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முரசொலி அறக்கட்டளை தரப்பு வழக்குரைஞர் , “தங்களது பேச்சுக்காக பதவியில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ” ஒருவர் அரசியலுக்குள் நுழையும்போது தேவையற்ற பேச்சுகளையும் கேட்க தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியதுடன், இதற்கு, ” அவர்கள் (முரசொலி அறக்கட்டளை) அரசியலில் ஈடுபடவில்லை என்று வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.