டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. உரிய ஆவணங்களுன் விண்ணப்பம் கொடுத்த 30 நாட்களுக்குள் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. மேலும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் கடந்த செப்டம்பர் 23ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வாதாடிய மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ”கொரோனாவுக்கு பலியானவர்களின் உயிரை மீட்டு தர முடியாது.”எனினும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது,” என்றார்.
இதை வரவேற்பதாக கூறிய நீதிபதிகள் இழப்பீடு வழங்கப்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது பல குடும்பத்தினரின் கண்ணீரை துடைக்கும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இழப்பீடு வழங்குவது எளிதல்ல. இந்தப் பிரச்னையில் இந்தியா செய்துள்ளதை மற்ற நாடுகள் செய்யவில்லை. இதற்காக மத்திய அரசை பாராட்டுகிறோம். இழப்பீடு வழங்குவது தொடர்பாக அடுத்த மாதம் 4ம் தேதி சில வழிகாட்டுதல்களை தெரிவிப்போம் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று (அக்டோபர் 4ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிட் -19-ல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .50,000 இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அதனை மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து 30நட்களுக்குள் அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கோவிட்டால் இறந்த நபர் தனது வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்தால், இறப்புக்கான காரணம் உண்மையிலேயே கோவிட் என்பது அதிகாரத்தை திருப்திப்படுத்தினால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இறப்பு சான்றிதழில் கோவிட் என்று காட்டாத காரணத்தால் எந்த மாநிலமும், கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கான இழப்பீடாக 50,000ஐ வழங்க மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் தொடர்பாக ஏதேனும் குடும்ப உறுப்பினருக்கு குறைகள் இருந்தால், அதை தீர்க்க மாநிலங்கள், குறைதீர்ப்பு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்த குழுவினர் இறந்தவரின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாம் என்று கூறியதுடன், இதற்காக, உயிரிழந்தவர்கள் குறித்த ஆவணங்களுக்காக, தேவைப்பட்டால் மருத்துவமனைகளிலிருந்து பதிவுகளுக்கு பெற்று ஆய்வு செய்யலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர்கள். பயனாளிகளின் பெயரை அச்சு ஊடகங்களில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
மேலும், இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் (NDMA) விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டது.
கொரேனாவல் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்குவதற்கான எளிமையான வழிகாட்டுதல்களை வடிவமைக்கவும், அது அவர்களுக்கு எக்ஸ் கிரேஷியாவைப் பெறவும், தேவைப்பட்டால், நகராட்சி அல்லது பிற அதிகாரிகளால் வழங்கப்பட்ட சான்றுகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூட்டாக வழிகாட்டுதல்ககளின்படி, RT-PCR/ மூலக்கூறு சோதனை/ விரைவான ஆன்டிஜென் சோதனை மூலம் கண்டறியப்பட்ட வழக்குகள் அல்லது ஒரு மருத்துவமனையில் அல்லது மருத்துவரால் உள்நோயாளியாக மருத்துவம் மூலம் நிர்ணயிக்கப்படும் போது ஒருவர் அங்கு அனுமதிக்கப்பட்டால், அது கோவிட் இறப்புகளாக அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.