டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மும்பை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்கியும் உத்தரவிட்டு உள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர்  12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.  இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.  ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மும்பையில்  மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்திய பின்னரே, நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,   வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை தேசிய தேர்வு முகமைக்கு  உத்தரவிட்டுள்ளது. நீட் யூ.ஜி. தேர்வை 2 மாணவர்களுக்கு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் எனவும் மும்பை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும் உள்ளது.

ஏற்கனவே  முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.