டில்லி:

வாக்காளர் அடையாள அட்டை, சொத்து ஆவணங்கள் ஆகியவற்றுடன் ஆதார் இணைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கள்ள ஓட்டு, போலி வாக்காளர்கள், ஊழல் மற்றும் பினாமி சொத்து பரிமாற்றம், கருப்பு பணம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டை, அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக்கோரி பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபத்யாயா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘‘இந்த மனு 4 வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலை¬யிலான பெஞ்ச் தெரிவித்தது.

‘‘நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களிடம் ஆதார் எண் உள்ளது. சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கூறுவது சிறந்த பொருத்தமாகும். இதன் மூலம் வரி முகமைகள் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமையாளர் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள முடியும். கற்பனை பெயர்களில் இயங்கி வரும் வரலாற்று சொத்துக்கள் மீதான பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.

கருப்பு பணம் வைத்திருப்போர் மற்றவர்கள் பெயர்களில் சொத்துக்களை பதிவு செய்கின்றனர். இதில் பத்திரம் மட்டும் அசல் உரிமையாளர்கள் வசம் இருக்கும். அதனால் ஒரு முறை ஆதார் இணைக்கப்பட்டு விட்டால் வரி முகமைகள் சட்டப்பூர்வ உரிமையாளரை நாட முடியும். இதன் பின்னர் அதை பினாமி சொத்துக்களை வகைப்படுத்த முடியும்’’ என்று செய்திகள் வெளியாகியுள்ளது.