சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

Must read

டில்லி:

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கில்,  இன்றைய விசாரணையை தொடர்ந்து ஆகஸ்டு 7ந்தேதிக்கு வழக்கை  உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்தது.

சென்னை சேலம் இடையே 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8வழி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க மத்திய, மாநில அரசுகள்  திட்டமிட்டது. அதைத்தொடர்ந்து, சாலைக்காக  சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5  மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டு நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழகஅரசு தொடங்கியது.

இதற்கு அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக  சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள்  டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன்  அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,  தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில்  உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள்,  மனு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை, மற்றும் தமிழகஅரசு பதில் அளிக்க கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில், சென்னை சேலம் இடையே 8 வழி சாலை அமைக்கப்பட்டால், அதன் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன? என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள், வழக்கை ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

More articles

Latest article