‘பெருநிறுவனங்களின் டைரிகளில் உள்ள லஞ்சக் குறிப்புகளை “விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை” என நிராகரித்த உச்சநீதிமன்றம் , முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் வீட்டு பார்வையாளர் குறிப்பேட்டை அடிப்படையாய் வைத்துத் தம்மீது வழக்குப் பதிவு செய்துள்ளதன் மூலம் உச்ச நீதிமன்றம் தனது இரட்டைநிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஞ்சித் சின்ஹா சிபிஐ இயக்குநராக இருந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவரது வீட்டில் தனியாகச் சந்தித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு ஊழல் விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை அவர் காலதாமத படுத்தி வந்தார் என்றும் புகார்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் வீட்டு பார்வையாளர் குறிப்பேட்டை அடிப்படையாய் வைத்து, அவர் மீது வழக்குபதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகக் உச்ச நீதிமன்றம் கருதியது. இதுதொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல். சர்மா தலைமையில் உச்ச நீதிமன்றம் ஜூலை 2015ல் நியமித்தது. தற்போது சி.பி.ஐ. இயக்குநர் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, சிபிஐ புதிய இயக்குநர் அலோக் வர்மா தலைமையில் சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க ஜனவரி-24, 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013, 2014-ஆம் ஆண்டுகளில் சஹாரா மற்றும் பிர்லா குழும நிறுவனங்களில், சிபிஐயும், வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தியதாகவும், அப்போது அரசியல்வாதிகளுக்கு அந்நிறுவனங்களால் லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பான மின்னஞ்சல்கள், ஆவணங்கள், டைரிகள் சிக்கியதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இதில், குஜராத் முதல்வராகப் பிரதமர் மோடி பதவி வகித்தபோது அவருக்குச் சஹாரா நிறுவனத்தால் பலமுறை லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் டைரிக் குறிப்புகளும் அடங்கும் என்றும், இதை சிபிஐயும், வருமான வரித்துறையும் மறைத்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார். சஹாரா டைரிக் குறிப்புகளில், தில்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்தின் பெயரும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல்காந்தி கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளப் பயந்த மோடி ராகுலை கேலி செய்வதன் மூலம் தனது பயத்தை மறைக்க முயற்சி செய்தார். “நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கேலி செய்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில் கூறுங்கள”் என்று ராகுல் மீண்டும் ஆதாரங்களைக் குறிப்பிட்டார். ஆகவே வேறு வழி இல்லாமல் ஊடகங்கள் மோடியின் ஊழலை விவாதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளபட்டன. தேதி வாரியாக மோடிக்கு கொடுத்த லஞ்சத்தை குறித்து வைத்திருக்கும். சகாரா பிர்லா டைரி மோடியின் கறைபடிந்த ஊழல் வரலாற்றில் ஒரு சிறு பகுதிதான். அதனால் விசாரணைக்கு உத்தரவிட முடியாமல் மோடி திணறுவதாகக் காங்கிரசின் ஜோதிமணி குற்றம் சாட்டி இருந்தார்.
நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. சாரதா சிட் பண்ட்–சகாரா குழு மோசடி விவகாரம் தொடர்பாக, சகாரா குழுத் தலைவர் சுப்ரதா ராயிடமிருந்து சி.பி.ஐ. பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் டைரியில் பா.ஜனதா தலைவர்களில் ஏ (அமித் ஷா?) என்ற பெயரும் என்.எம். (நரேந்திர மோடி ?) என்ற பெயரும் இடம் பெற்று இருக்கிறது. ‘கடந்த நவம்பர் மாதம் சகாரா குழு அலுவலகத்தில் சி.பி.ஐ. கைப்பற்றிய டைரியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் என்.எம். என்கிற ஒரு பெயரும் இடம் பெற்றுள்ளது. சி.பி.ஐ. இந்தப் பெயர்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதேன்? இந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் யார்? இந்த டைரியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா தலைவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால். சபாநாயகர் இதனை அவையில் விவாதிக்க ஏற்கமறுத்தார்.
இந்நிலையில் சகாரா- பிர்லா டைரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் குறிப்புகள்குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை, “டைரியை” அடிப்படையாய்க் கொண்டு வழக்கு நடத்த உத்தரவிட முடியாது என்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், “சட்ட ரீதியாக, லஞ்சம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சகாரா -பிர்லா டைரிகளின் நம்பகத்தன்மை, என்மீதான வழக்கிற்கு காரணமான “பார்வையாளர் குறிப்பேட்டை விட அதிகம். ஆனால், கார்ப்பரேட், அரசியல்வாதிகள் விசயத்தில் ஒரு நிலைப்பாட்டையும், அரசு அதிகாரியான என்மீது ஒரு நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது, துரதிஸ்டவசமானதென்று” முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் தெரிவித்தார்.
மேலும், அந்தப் பிர்லா டைரி வழக்கைக் காரணம் காட்டி, ஜனவரி-23ல் தன் மீதான வழக்கு விசாரணையைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளார்.