சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி தனது ஆதரவாளரை களமிறக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு பாஜக ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை தான் நாங்கள் விரும்புகிறோம். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியினர் எங்களுடன் பேசி வருகின்றனர் . எங்களை பொறுத்தவரை எப்போதும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் எண்ணம். இதை தான் தொடக்கம் முதல் கூறி வருகிறேன். குழப்பத்தை உருவாக்கியது நாங்கள் கிடையாது” என்றார்
“அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது. தேர்தல் ஆணைய பி படிவத்தில் கையெழுத்திட நான் தயாராக உள்ளேன். இரட்டை இலை கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இதுவரை ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராக உள்ளோம். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்றார்.
அதே சமயம் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவளிப்போம். பாஜக தேசிய கட்சியாக இருப்பதால் அவர்கள் போட்டியிட்டால் நல்ல வாய்ப்பாக இருக்கும்.
அதிமுக அதன் விதிகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது தர்மயுத்தம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பமும் கூட. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை இருப்பதால் நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறோம். வரும் 23 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் அதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறினார்.