சென்னை:

மிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம், 2019–2020ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் பேரவையின் முன் துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்தத் துணை மதிப்பீடுகள், மொத்தம் 6,408.82 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இவற்றில் 5,732.06 கோடி ரூபாய் வருவாய்க் கணக்கிலும், 676.76 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

2020ம் ஆண்டு ஜனவரி திங்கள் 9ம் நாளன்று, 2019–2020ம் ஆண்டிற்கான இரண்டாவது துணை மதிப்பீடுகள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ‘‘புதுப் பணிகள்” மற்றும் ‘‘புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் முக்கிய நோக்கங்களாகும்.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கும் 231.07 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 43 – ‘‘பள்ளிக் கல்வித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ், இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அரசு 160.56 கோடி ரூபாயை கூடுதல் நிதியாக அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 43 ‘‘ பள்ளிக் கல்வித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவதற்காக அரசு 123.39 கோடி ரூபாயை கூடுதலாக அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 43 ‘‘பள்ளிக் கல்வித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

கடலோரப் பேரிடர் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ், நெகிழ்திறன் சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவுவதற்காக 113.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 14 ‘‘ எரிசக்தித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் நீண்டகால அளவிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சேதமடைந்த அரசுக் கட்டடங்களைப் பழுதுபார்த்து சீரமைக்கவும் அரசு 193.55 கோடி ரூபாயை கூடுதலாக அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 51 ‘‘இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 60 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 51 ‘‘இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய ஆயுஷ் குழுமம், தேசிய ஊரக மற்றும் நகர்ப்புர சுகாதார இயக்கங்கள் போன்ற மத்திய அரசின் உதவி பெறும் பல்வேறு திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகையுடன் சேர்த்து 579.32 கோடி ரூபாய் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் 299.93 கோடி ரூபாய் மானியக் கோரிக்கை எண் 19 ‘‘மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

மருத்துவமனைகளுக்கு மருந்து கொள்முதல்

பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்காக அரசு 166.94 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. இதற்காக, துணை மதிப்பீடுகளில் 153.28 கோடி ரூபாய் மானியக் கோரிக்கை எண் 19 ‘‘மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காகவும் இதர மாவட்ட நிர்வாகச் செலவுகளுக்காக வும் அரசு 252.46 கோடி ரூபாயை கூடுதலாக அனுமதித்துள்ளது. இதற்காக, துணை மதிப்பீடுகளில் 112.14 கோடி ரூபாய் மானியக் கோரிக்கை எண்.41 ‘‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்களை எதிர்கொள்வதற்காக 188.41 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, துணை மதிப்பீடுகளில் 140.57 கோடி ரூபாய் மானியக் கோரிக்கை எண் 20 ‘‘உயர்கல்வித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு 198.37 கோடி ரூபாயை கூடுதலாக அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண் 45 ‘‘சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

2019–2020ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.