புதுடெல்லி: மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் வாய்ப்புகள் கிடையாது என்று உறுதிபட தெரிவித்துவிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து முறையான அறிவிப்பை பெற்ற பிறகே, ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அரோரா.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர், அதுதொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினார்.

“நாம் மீண்டும் வாக்குச்சீட்டு யுகத்திற்கு செல்ல முடியாது. உச்சநீதிமன்றம் வாக்குச்சீட்டு முறை என்பது நாட்டின் கடந்தகாலம் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது” என்றார் அரோரா.

மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், ராஜ் தாக்கரே போன்றோர் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கட்டாயம் மோசடி செய்ய முடியும் என்பது அவர்களின் வாதம்.