கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குடும்பத்திற்கு சொந்தமான சென்னை வீடு விற்கப்பட்டது.
ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதியின் மகனான சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார்.
பின்னர், சென்னை அசோக் நகருக்கு அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்ததை அடுத்து அதே பகுதியில் உள்ள ஜவஹர் வித்யாலயா பள்ளியிலும் பின்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வனவாணி வித்யாலயாவிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
அதன் பின் ஐ.ஐ.டி. கராக்பூரில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை பின்னர் படிப்படியாக முன்னேறி உலகின் முதல் நிலை நிறுவனமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவுக்கு புகழ் சேர்த்து வருகிறார்.
தற்போது இவரது பெற்றோர் அமெரிக்காவில் வசித்து வருவதை அடுத்து சென்னையில் உள்ள இவர்கள் வீட்டை விற்க அவரது தந்தை தீர்மானித்தார்.
இதனையறிந்து, செல்லப்பாஸ் பில்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் நடிகரும் தயாரிப்பாளருமான சி. மணிகண்டன் இந்த இடத்தை வாங்கியுள்ளார்.
இந்த இடம் விற்பனைக்கு வருகிறது என்று கூறியபோது இது சுந்தர் பிச்சை வீடு என்பது முதலில் தெரியாது என்றும் பின்னர் இது அவர் வசித்த வீடு என்று தெரிந்தவுடன் எனக்கு பெருமையாக இருந்தது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தவிர, இந்த இடத்தில் இருந்த கட்டிடத்தை சுந்தர் பிச்சையின் தந்தை தனது சொந்த செலவில் இடித்து காலி மனையாக என்னிடம் ஒப்படைத்தது மட்டுமல்லாமல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூட தான் யார் என்ற விவரத்தைக் கூறிக்கொள்ள விரும்பவில்லை என்று பெருமைபொங்க கூறியுள்ளார்.