சன் டிவி நெட் ஒர்க்கின் மலையாள சேனலான சூர்யா டிவியில், ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சன் நெட் ஒர்க் தமிழில் குழந்தைகளை வைத்து அண்ணாச்சி இமான் நடத்துகிறாரே.. அதே மாதிரியான நிகழ்ச்சிதான், மலையாள “குட்டிபட்டாளம்.”
சிறு குழந்தைகளிடம் (அவர்களின்) வயதுக்கு மீறிய கேள்விகள் கேட்பது, அவர்கள் அர்த்தம் புரியாமல் அளிக்கும் ஏடாகூட பதில்களை, பார்வையாளர்கள் (அந்த குழந்தைகளின் பெற்றோர் உட்பட) ரசிப்பது என்று அங்கும் இதே கதைதான்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், நடத்துனர் சிறுமி ஒருவரிடம் வரம்பு மீறி பேசியது சர்ச்சையானது.
அந்த   “நீ எதற்கு இங்கே வந்துள்ளாய்” என்று நிகழ்ச்சி நடத்துனர் கேட்க.. அந்த அறியா சிறுமி, “திருமணம் செய்து கொள்ள!” என்று பதில் அளித்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துனர், “எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்” என்று கேட்க அதற்கும் அந்த சிறுமி விபரம் புரியாமல் பதிலளித்தார். பிறகு, “இந்த அரங்கிலேயே உனக்குப் பிடித்த மாப்பிள்ளையே தேர்வு செய்” என்றார் நடத்துனர்.
இதை அரங்கில் இருந்த அவரது பெற்றோர் உட்பட அனைவரும் ரசித்து சிரித்தனர்.
kuttipattalam_screenshot
இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து  குழந்தை உரிமை ஆணைக்குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறித்து ஆராய்ந்த, குழந்தைகள் உரமை ஆணையக்குழு, நிகழ்ச்சிக்கு தடை விதித்துவிட்டது.
இது பாராட்டத்தக்க செயல். இதே போன்ற நிகழ்ச்சி சன் நெட் ஒர்க்கின் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இங்கும் தடை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.