நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.

பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.

இதன் கடைசி அழைப்பாணையை வழங்க காவல்துறையினர் சீமான் வீட்டுக்கு நேற்று சென்ற நிலையில் அந்த சம்மனை சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றனர்.

இந்த சம்மன் ஒட்டப்பட்ட உடன் கிழிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது.

இதை விசாரிக்க அங்கு வந்த நீலாங்கரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் சீமான் வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்த நிலையில் அவரை சீமான் வீட்டு காவலாளி தடுத்து நிறுத்தினார்.

இதனை மீறி உள்ளே நுழைய முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை காவலாளி மிரட்டியதை அடுத்து அவருடன் சென்ற போலீசார் காவலாளியை மடக்கி தடுத்த நிலையில் அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்ததில் அங்கு களேபரம் நடந்தது.

இந்த களேபரத்தை அடுத்து காவல்துறையினரை பணிசெய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக துப்பாக்கியுடன் இருந்த அந்த காவலாளியை குண்டுக்கட்டாக தூக்கி வந்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், தனது வீட்டின் முன் ஒட்டப்பட்ட சம்மனை தான் தான் கிழிக்கச் சொன்னதாக சீமானின் மனைவி கயல்விழி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

வெளியில் வந்து சம்மனை படிப்பதற்கு சங்கடமாக இருந்ததை அடுத்து அதை கிழித்து எடுத்து வருமாறு வீட்டு உதவியாளரிடம் ஆணையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டு தான் காவல்துறையினர் பாதுகாவலரை கைது செய்துள்ளனர் என்றும் நாங்கள் எப்போது சம்மனை கிழித்து இருந்தாலும் காவல்துறையினர் இப்படி தான் செய்திருப்பார்கள் என்றும் கூறினார்.