டெல்லி: நாடு முழுவதும் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, பள்ளி மாணாக்கர்கள் பாதிக்கப்படாத வகையில், பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சகம் மாநில கல்வித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இந்த வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் அக்னி வெயில் தொடங்கி உள்ள நிலையில், அசானி புயல் காரணமாக பெய்த கோடை மழை யால், வெயில் தனிந்து கடந்த சில நாட்களாக குளிர்காற்று வீசி வருகிறது. ஆனால், டெல்லி உள்பட வட மாநிலங்களில் வெயிலும், அனல்காற்றும் அதிகரித்து வருகிறது. தலைநகர் டில்லியில் வெயில் அளவு 46 டிகிரி செல்ஷியசை நெருங்கியுள்ளது.

இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை இயக்குவதில் பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இதில், பள்ளிகள் இயங்கும் நேரத்தை குறைப்பது, சீருடை அணிவதில் விலக்கு அளிப்பது, மைதானங்களில் விளையாடுவதை தவிர்ப்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்குத் தொடங்கி மதியத்திற்குள் முடிக்கும் வகையில் மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும்,  காலையில் நடத்தப்படும் வழிபாட்டை, நிழல் பகுதியில் நடத்த வேண்டும், வெளி விளையாட்டுகளும் காலையிலேயே நடத்த வேண்டும் .

வகுப்பறைகள் காற்றோட்டமாக உள்ளதா?, மின்விசிறி செயல்படுகிறதா? உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.

முடிந்தவரை மாணவர்களை பெற்றோர்களே பள்ளிக்கு அழைத்து வருமாறும், மத்திய கல்வி அமைச்சகம்  வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.