ஈரோடு:
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடையும். அப்போது வெயில் அதிகமாக கொளுத்தும்.
ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. பசிபிக்பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்னும் கடல்மட்ட வெப்பம் காரணமாக வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் வெப்ப காற்று வீசிவருகிறது.
கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்ததால் கரைப்பகுதியை நோக்கி வீசும் காற்று வெப்பமாக உள்ளது. இந்த வறண்ட வானிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை தொடக்கத்திற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளார்.