சென்னை:
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையானது தான் என்று தடயவியல் நிபுணர்களின் ஆய்வறிக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை ஐஐடியில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்பவர் கடந்த மாதம் (நவம்பர்) 9-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மொபைல் போனில், தனது தற்கொலை குறித்து சில தகவல்களை பதிவு செய்திருந்தார்.
அதில்,தனது தற்கொலைக்க இணை பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்ததாக பாத்திமாவின் தந்தை, கேரள முதல்வரிடம் முறையிட்ட நிலையில், சென்னை வந்தும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கூறப்பட்டது. அதையடுத்து பாத்திமாவின் தற்கொலை குறித்து மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்ட காவல்ஆணையர், தானே நேரில் சென்று சம்பந்தப்பட்டபேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
முற்கட்ட விசாரணையில், தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால், பேராசிரியர்கள் கண்டித்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், பாத்திமாவின் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது செல்போன் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
அதை ஆய்வு செய்த தடயவில் நிபுணர்கள், தங்களது முதற்கட்ட தடயவியல் ஆய்வறிக்கையில் மாணவி பாத்திமாவின் தற்கொலை குறிப்பு, போலியானது அல்ல என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையை ஒப்படைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட 3 பேராசிரியர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.