சென்னை: பருவமழை பொய்த்துப் போனது, கட்டுபடியாகாத கரும்பு விலை, சர்க்கரை விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், சர்க்கரை உற்பத்தி தொழில் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இதன்மூலம், 30000 சர்க்கரை ஆலை பணியாளர்கள், 1.5 லட்சம் மறைமுக பணியாளர்கள் மற்றும் 5 லட்சம் கரும்பு விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
8 தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட மொத்தம் 9 ஆலைகள், கரும்புகள் கிடைக்காததால் இந்தப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடப்போவதில்லை என்ற தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தின் 25 சர்க்கரை ஆலைகளில் 13 ஆலைகள், மோசமான கடன் வசூலிப்பு செயல்பட்டால் மூடப்படும் நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளன. இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு சர்க்கரை உற்பத்தி தொழிலின் நிலை.
இத்தகைய பாதிப்புகளால், இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் நான்காவது இடம் வகித்த தமிழ்நாடு, தற்போது எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ள வடதமிழகத்தில், பருவமழை பொய்த்துப் போனதால் நிலவும் கடுமையான வறட்சி, கரும்பு விளைச்சலை வெகுவாக பாதித்துள்ளது.