சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்புக்கட்டுக்கள், காய்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்கி செல்லும் நிலையில், பொதுமக்கள் வருகை அதிகரிக்குமா என வியாபாரிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறார்கள்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குகிறது. இதன் காரணமாக  பொங்கல் பண்டிகை வியாபாரம் களை கட்டும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் கோயம்பேட்டை முற்றுகையிடுவார்கள் என வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு நாளில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில்,  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போதே ஏராளமான கரும்புக்கட்டுக்கள் வந்து குவிந்துள்ளன. அதுபோல,  காய்கறிகள் பூக்கள் வரத்தும் அதிகரித்து உள்ளது. மேலும் பொங்கலுக்கு தேவையான வாழை இலை, மஞ்சள் கொத்து உள்பட அனைத்து வகையான பொருட்களும் குவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த ஆண்டு காய்கறிகள் மற்றும் கரும்புக்கட்டுகளின் விலையும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பனி காரணாக பூக்கள் கருகி விடுவதால், இந்த ஆண்டு பூக்களின் விலை விண்ணில் பறக்கிறது.

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயலுக்கு மஞ்சள் குலை, வாழை போன்ற பயிர்கள் வரலாறு காணாத அளவில் சேதமடைந்ததால், அவைகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பெரும்பாலான  பொதுமக்கள் நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு சென்றே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவர். இந்த நிலையில் தற்போது  வியபாரிகள் தங்கள் வியாபாரத்துக்கு தேவையான  பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் பொதுமக்கள் கோயம்பேடு சந்தையை முற்றுகையிடுவார்கள் என நம்பப்படுகிறது.

வியாபாரிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வியாபாரம் களைகட்டுமா?