சென்னை:
சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினரால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதம் போன்ற ஆழமான போராட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபை அமளி காரணமாக  திமுக உறுப்பினர்கள் 79 பேர் ஒரு வார காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீது பேசிய முதல்வர் ஜெயலலிதா, சஸ்பெண்ட் செய்யப்படாத கருணாநிதி சட்ட சபைக்கு வர வேண்டும், வந்து மானிய கோரிக்கைமீது பேச வேண்டும் என்று சவால் விடுத்தார். இதன் காரணமாக நேற்று சட்டசபை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
ஜெயலலிதாவின் சவால் குறித்து, நேற்று மதியம் கருணாநிதி தலைமையில் மூத்த உறுப்பினர்கள் உடனடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கருணாநிதி சட்டசபை செல்வார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் கருணாநிதி சபைக்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று இரவு சென்னையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ராயபுரம் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக.தலைவர் கருணாநிதி பேசியதாவது:
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் இந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகம் எப்பாடும் படட்டும் அது பற்றி கவலை இல்லை என்று கருதினால், இந்த கூட்டத்திற்கு அவசியம் இல்லை. நாங்கள் வந்து பேச வேண்டிய தேவையும் இல்லை.  இங்கு கூறிய கருத்துக்களை நீங்கள் சிந்தையில் பதித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி தமிழக சட்டமன்றம் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் தேர்தலில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுபவன் அல்ல.
நடந்து முடிந்த தேர்தலில் நாம் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு ஆளானோம். அதற்கு காரணம் நாங்கள் அல்ல, நீங்கள் தான்.
kalignar
இதைப் பயன்படுத்தி திமுகவை வீழ்த்தலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இனப்பற்று, இன உணர்வை அழிக்கப் பார்க்கிறார்கள். அதை நாம் சவாலாக ஏற்று செயல்பட வேண்டும், எத்தனையோ தேர்தல்களில் திமுக தோற்று இருக்கிறது. தேர்தலில் அண்ணா வெற்றி பெற முடியாமல் போனது என்பதற்காக அண்ணாவை உலகம் மறக்கவில்லை.
எந்த காலத்திலும் சலசலப்புக்கு அஞ்சிய இயக்கம் இது அல்ல. காவல் துறையின் அடக்குமுறைக்கு, ஆளும் கட்சியின் அறைகூவலுக்கு திமுக என்றும் பயந்தது இல்லை. அதை மீறித் தான் இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது. இன்னும் வளர இருக்கிறது. யாரும் சந்தேகப்படத் தேவை இல்லை. அஞ்சத் தேவையில்லை. இந்த கழகம் வெற்றிகளை குவிக்கச் செய்ய இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார்கள். இதை விட பெரிய தியாகத்திற்கு தங்களை அவர்கள் தயார் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நாம் மக்களுக்கு விளக்க வேண்டிய கருத்துக்களுக்கு இந்த ஒரு கூட்டம் போதாது. விளக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. இந்த கூட்டத்தின் பலனை நாம் பெற்று தீர வேண்டும். வெற்றி பெற்றவர்களிடம் பதவி அதிகாரம் இருக்கிறது. அவர்கள் என்ன என்ன மாய்மாலங்கள் செய்கிறார்கள் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். இந்த கூட்டத்தோடு மட்டும் அல்லாமல் நாம் சொல்ல வேண்டிய கருத்துகளை எப்படி மக்களிடம் எடுத்து சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.  எதிர்காலத்தில் இதுபோன்று அதிக அளவில் கூட்டத்தை நடத்தி கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அத்துடன் சாத்வீக முறையில், நம்மை அர்ப்பணிக்கும் வகையில் ஏன் நடத்தக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
விரைவில் நம்முடன் இருக்கின்ற மற்ற கட்சிகளின் தோழர்களை எல்லாம் கலந்து பேசி, திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிலும் கலந்து கொண்டு, மாவட்டங்களில் உள்ள திமுக இளைஞர்களை கலந்து கொண்டும், வட்டார அளவில் உள்ள திமுகவினரை கலந்து கொண்டும் இன்னும் பல தோழர்களையும் கலந்து கொண்டு, அவர்களுக்கும் நமது திட்டத்தை ஆழமாக எடுத்து சொல்லி நமது கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முற்படுவோம் என்று எண்ணுகிறேன். அதையும் உண்ணாவிரதம் போன்ற வகையில் எடுத்து சொல்லலாம்.
சட்டமன்றத்தில் முதல்வரால் ஏற்படும் இடர்பாடுகளை எடுத்துச் சொல்லி இதற்கு தீர்வு என்ன என்ற கேள்வியை மக்களிடம் கேட்கும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது தோழர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தமிழகத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நீக்கிவிட்டு நல்ல மாநிலமாக ஆக்க பாடுபடுவோம். இடையில் ஏற்பட்டுள்ள தடையை கடந்து வந்து நமது கருத்துகளை எடுத்துக்கூறும் காலம் வரும். அதை எதிர்பார்த்துள்ளோம். எப்படியோ நாம் கவிழ்க்கப்பட்டோம், கவிழ்ந்துவிட்டோம்.
நடந்த தேர்தலின்போது வாக்கு எண்ணும் போதே, ‘நாம்தான் ஜெயிக்கப் போகிறோம், உங்கள் நடவடிக்கையை செய்யுங்கள்’, என்று செய்தி வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகவல் போகிறது, திமுகவை வீழ்த்தும் சூழ்ச்சி அங்கு நடத்தப்படுகிறது. திமுக தான் வெற்றி பெறும் என்று தமிழகமே எதிர்பார்த்துள்ள நிலையில், ஏன் இந்தியாவே எதிர்பார்த்துள்ள நிலையில் எப்படி நாம் புறந்தள்ளப்பட்டடோம்? உண்மையில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். இதற்கு யார் யார் எல்லாம் துணையாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். எதிர்காலத்தில் அதற்கு பதில் சொல்லும் நேரம் வரும். திமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க தண்டனை உண்டு. அதற்கு தீர்வாக, தமிழகத்தில் மறு மலர்ச்சி ஏற்பட்டு தமிழகத்தை தமிழன் ஆளுவான் என்ற நம்பிக்கையோடு நாம் வெற்றி பெறுவோம். தொடர்ந்து நாம் அண்ணா, பெரியார் வழியில் நடந்து இந்த மாபெரும் இயக்கத்தை வளர்ப்போம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.