சென்னை

சென்னை மாநகராட்சி இணையதளம் திடீரென முடங்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது,

கடந்த 2023-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு 1,560 பேர் மட்டுமே செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்றனர்.  பொதுமக்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதில் ஆர்வம் காட்டாததால், 2024-ம் ஆண்டு மே 4-ந்தேதி வரையில் 125 போ் மட்டுமே பதிவு செய்திருந்தனர்.

கடந்த 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை 2 வெளிநாட்டு ரக ராட்வீலர் வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியதில் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டார். என்வே வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட அனைத்துச் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்தது.

இதனால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெற https//chennaicorporation.gov.in/ என்ற மாநகராட்சி இணையதளத்தில் தொடர்ச்சியாக விண்ணப்பித்து வருகின்றனர்.  ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் திடீரென மாநகராட்சி இணையதளம் முடங்கியது.

இதையொட்டி செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுனர்கள், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுநேற்று மதியம் இணையதளம் சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்து உரிய ஆவணங்களை இணைக்காததால் 4 ஆயிரத்து 168 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இவர்களில் 1,175 பேருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டதாகவும் மேலும், 2 ஆயிரத்து 540 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.